பெங்களூருவில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க க்யூ பிரிவு காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் கொலை வழக்கில், காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரையும் டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். இதே வழக்கில் தொடர்புடைய அப்துல் சலீம் மற்றும் தெளபிக் இருவரும் களியக்காவிளையில் காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியுள்ளனர். இந்த நிலையில் சுரேஷ்குமாரை கொலை செய்த தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்த முகமது அனீப்கான், முகமது சையது, இம்ரான் ஆகிய மூவரையும் பெங்களூருவில் க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள், 89 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய காஜா மொய்தீன், சையது அலி நிவாஸ் ஆகிய இருவரையும் 4 நாட்களில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று டெல்லியில் இவர்கள் விட்டது தெரியவந்தது. பின்னர் மூவரையும் சென்னை எழும்பூர் இரண்டாவது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் க்யூ பிரிவு காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். இதையடுத்து, க்யூ பிரிவு காவல்துறையின் கோரிக்கையை ஏற்று தீவிரவாதிகளுக்கு உதவிய மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 19ஆம் தேதி மீண்டும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post