ஃபானி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் ஒடிசா மாநில அரசு உஷார் நிலையில் உள்ளது. மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கும் ஆரஞ் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதி தீவிர புயலாக உருவெடுத்திருக்கும் ஃபானி புயல், நாளை ஒடிசா மாநிலம் கோபல்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையை கடக்கிறது. தற்போது புரியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைக்கொண்டிருக்கும் ஃபானி புயல், கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு கடலோர காவல் படை மூலம் எச்சரித்துள்ளனர்.
அதேசமயம் 41 மீட்பு குழுக்கள் தயார்நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்திருக்கும் நிலையில், கடலில் எண்ணெய் எடுக்கும் வலையத்திலிருந்து 480 ஊழியர்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற்றியுள்ளது. மேலும் ஒடிசா மாநிலத்தில் கஞ்சம், கஜாபதி, குர்தா, புரி, ஜகட்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் இருக்கும் என கணித்திருப்பதால், அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கிழக்கு கடற்கரை ரயில்வேயும், தென் கிழக்கு ரயில்வேயும், ஆந்திரா, ஒடிசா வழியாக இயக்கப்படும் 40க்கும் ரயில்களை ரத்து செய்துள்ளன. புயலால் இருப்பு பாதைகள் சேதமடையும் வாய்ப்பு இருப்பதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் நாளை கரையை கடக்கும் போது, உயிர்சேதத்தை தவிர்க்க கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை ஒடிசா அரசு மேற்கொண்டு வருகிறது.
ஃபானி புயல் ஒரிசா மாநிலத்தில் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.