அமெரிக்காவில் உள்ள, உலகின் மர்மங்கள் நிறைந்த பகுதியாக கருதப்படும் ஏரியா 51, சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் டிரெண்ட் ஆனது. அப்படி என்னதான் இருக்கிறது ஏரியா 51ல் ?
ஏரியா 51 பகுதியானது அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் அமைந்துள்ளது. அதன் உண்மையான பெயர் ‘நெவேடா டெஸ்ட் And Training Range’ ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது, இங்கு அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஆயுத சோதனைகள், புதுமையான ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் போன்றவை இங்குதான் நடைபெறுகின்றன. அதற்காகவே பாலைவன பகுதி போல நீளும் இந்த பகுதியை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, உலகத்திற்குத் தெரியாதவகையில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை செய்து வருகிறது அமெரிக்கா . ‘ஏரியா 51 பகுதி, முதலில் ‘ஏரியா 15’ என்றே அழைக்கபட்டது, பின்னாளில் ‘ஏரியா 51’ என மாறியது.
சமீப காலங்களில், ஏரியா 51 பகுதியில் வேற்று கிரகம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளும் நடப்பதாக எழுந்த சர்ச்சையினால், இந்தப் பகுதி உலக மக்களிடையே திடீரெனப் பிரபலம் அடைந்தது. இப்படியாக, ‘ஏரியா 51’ பற்றிய பரபரப்பு அடிக்கடி காட்டுத்தீ போல பரவியதற்கு, பாப் லஸார் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு காரணம். இந்த பாப் லஸார், 1989-ம் ஆண்டு முதல் ‘ஏரியா 51’ பகுதியின் எஸ்-4 சோதனை பிரிவில் பணியாற்றியதாகவும், இவரே ஏரியா 51 பகுதியில் நடக்கும் ஏலியன் ஆராய்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார் என்றும் நம்பப்படுகிறது.
பாப் லஸார் ‘ஏரியா 51’ பகுதியில் சில ஏலியன்களை பிடித்து வைத்து, ஆய்வுகளை மேற்கொள்வதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரும் ஏலியன் தொடர்பான பல உண்மைத் தகவல்களை வெளியிட்டு வருவது, இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல அமைந்தது. இதனால் மக்கள் அந்தப் பகுதியைப் பற்றி அறிய கூடுதலாக ஆர்வம் காட்டினர்.
வெள்ளை நிற விமானத்தின் நடுவே சிவப்பு கோடு இருக்கும் ‘ஜேனெட்’ என அழைக்கப்படும் விமானம் மட்டும் தான் ‘ஏரியா 51’ பகுதியின் வானில் பறக்க அனுமதிக்கப்படுகின்றது. ராணுவ விமானங்களுக்கு கூட இந்த பகுதியில் பறக்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான ‘ஏரியா 51’ஐ பொதுமக்கள் பார்க்க முடியும். அதுவும் 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘டிகாபூ பீக்’ பகுதியில் நின்று, தொலைநோக்கி வழியே பார்க்கலாம்.
இதற்கு முன்பாக ‘Wide Sides’ மற்றும் ‘Freedom Ridge’ என இரு இடங்களில் இருந்து ஏரியா 51 பகுதியை பார்க்க முடிந்தது. பின்னாளில் இவை இரண்டும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவை சேர்ந்த மேட்டி ராபர்ட் என்பவர்,‘‘ஏரியா 51’ பகுதி பற்றி தெரிந்து கொள்ள, அனைவரும் படைத்திரண்டு வாருங்கள் ’ என பேஸ்புக்கில் பதிவுசெய்தார். இதை தவறாக புரிந்து கொண்ட நெட்டிசன்கள், நேரடியாக களத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டனர். ஏரியா 51 பகுதியை நோக்கி தங்களால் முடிந்த தூரம் வரை சென்று, ட்விட்டுகளையும், பேஸ்புக் பதிவுகளையும் அள்ளித் தெளித்தனர். இதனால் ‘ஏரியா 51’ சமீபத்தில் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.
உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில், பல மர்மங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான மர்மமாக, ஏரியா 51 தொடர்கிறது…
Discussion about this post