ஹாலிவுட் சினிமா உலகில் தனது நடிப்பு திறமையால், தனி சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர்களில் சர் அந்தோணி ஹாப்கின்ஸ் மிக முக்கியமானவர்.
83வது வயதில் இரண்டாவது முறையாக ஆஸ்கர் விருது வென்று கம்பீரமாக வலம் வரும் அந்தோணி ஹாப்கின்ஸை பற்றி தற்போது காணலாம்…
இங்கிலாந்துக்குட்பட்ட வெல்ஷ் பகுதியில் 1937 ஆம் ஆண்டு பிறந்த அந்தோணி ஹாப்கின்ஸ், தனது சிறுவயதில் பியானோ வாசிப்பதிலும், ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
தொடர்ந்து அவர், லண்டனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார்.
1960 ஆம் ஆண்டு லண்டனில் அரங்கேற்றப்பட்ட மேடை நாடகத்தில் அறிமுகமானார் ஹாப்கின்ஸ்.
அதனைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு, நேஷனல் தியேட்டர் நிறுவனத்தில் இணைந்த அந்தோணி ஹாப்கின்ஸ், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், தனது நடிப்பால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
1968ம் ஆண்டு வெளியான ‘தி லயன் இன் விண்டர்’ (The Lion in Winter) படத்தில் நடித்த ஹாப்கின்ஸ், சிறந்த துணை நடிகருக்காக பாஃப்டா (BAFTA) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
1970ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி கிரேட் இனிமிட்டபிள் மிஸ்டர் டிக்கென்ஸில்’ (The Great Inimitable Mr.Dickens) திரைப்படம், 1972 ஆம் ஆண்டு மினி தொடராக வெளிவந்த, வார் அண்ட் பீஸ் (War and Peace), ஹாப்கின்ஸின் திரைப் பயணத்தில் மிக முக்கியமானதாகும்.
அந்தோணி ஹாப்கின்ஸை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ, “சந்தேகத்துக்கு இடமின்றி ஹாப்கின்ஸ் தனது தலைமுறையின் மிகப் பெரிய நடிகர்” என அவருக்கு புகழாரம் சூட்டினார்.
The silence of the lambs, The Remains of the day, Nixon, Amistad, The Two Popes உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம், ஹாலிவுட் உலகில் தனி சாம்ராஜ்யத்தை கட்டமைத்தார் ஹாப்கின்ஸ்.
சாம்பல் நிறக் கண்கள், கூர்மையான பார்வை, நளினமான உடல்மொழி என திரையில் தனி அவதாரம் எடுத்த ஹாப்கின்ஸ், ஆறு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, இருமுறை விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவைகள் தவிர 4 முறை பாஃப்டா, இருமுறை எம்மிகள் விருதுகளையும் பெற்றுள்ளார்.
1993 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் கலைக்கான சேவைகளுக்காக அவர் நைட் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post