கடந்த 3 ஆண்டுகளாக புதிதாக எந்த திரைப்படமும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகாத நிலையில், கைவசம் இருக்கும் 2 படங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. பிரமாண்ட இயக்குநர் சறுக்கியது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…
பிரமாண்ட இயக்குநர் என பெயர்பெற்ற ஷங்கர், தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக அவரது இயக்கத்தில் ஒரு படம் கூட வெளிவராமல் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அவ்வப்போது நீதிமன்ற வழக்குகளின் மூலம்தான், அவர் பெயர் ஊடகங்களிலேயே அடிபடுகிறது. 1993ஆம் ஆண்டில் வெளியான அவரது முதல்படமான ஜென்டில்மேனில் தொடங்கியது அவரது சர்ச்சைகளின் பட்டியல். இடஒதுக்கீடு குறித்த அவரது தவறான புரிதலும், ஒருதலைபட்சமான பார்வையும் அம்பலமானதாக கொந்தளித்தனர் ஒருசாரார்.
இவரது இயக்கத்தில் உருவான அந்நியன் திரைப்படமும் வசூல் அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்றது. வேலைக்கு போகாமல் பார்க்கில் தூங்குபவர்கள், சாலையில் எச்சில் துப்புபவர்கள், சிக்னலில் நிற்காதவர்கள் என்றால் இயக்குநர் ஷங்கர், கோபத்தின் உச்சிக்கே சென்று, கருடபுராணத்தையெல்லாம் கையில் எடுத்து, மரண தண்டனை வழங்கி தண்டித்திருப்பார். ஆனால் படத்தில் நாயகி செய்த தவறை மட்டும் மன்னித்து விடுவார். ஷங்கருக்கு ஒருகண்ணில் சுண்ணாம்பு, ஒருகண்ணில் வெண்ணைய் என்பதற்கு அந்நியன் ஆகச்சிறந்த உதாரணம் என்பது கோடம்பாக்கத்தின் ஹாட் டாக்.
””இந்தியன்” படம் மேலும் ஒரு படி நகர்ந்து, ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் ஊழல் கறை படிந்திருப்பதாக சித்தரித்து, அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இயக்கியதாக ஷங்கருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதால்தான், இந்தியா இன்னும் வல்லரசு ஆகாமல் இருக்கிறது என்ற ரேஞ்சுக்கு இந்தியன் படத்தில் பில்டப் கொடுத்திருப்பார். ஆனால் இதே ஷங்கர்தான் 2012ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருந்து வாங்கிய தனது “ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்” சொகுசு காருக்கு நுழைவு வரியாக 44 லட்சம் ரூபாய் செலுத்த மறுத்து நீதிமன்றம் சென்றார். 12 முதல் 15 சதவிகிதம் வரை நுழைவு வரி செலுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஏற்க மறுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டினார்.
கருப்புப் பணம் என்றால் அறைக்குள் அடுக்கி வைத்தோ, மூட்டைகளில் கட்டி வைத்தோ, பூமிக்கடியில் புதைத்து வைத்தோ இருப்பார்கள் என்ற பார்வையில் சிவாஜி படம் உருவாக்கப்பட்டிருக்கும். “உங்க ஐயா பணத்தை எங்க ஒழிச்சு வச்சிருக்காரு சொல்லு, சொல்லு” என பணக்காரர் வீட்டு வேலையாட்களையும், ஆடிட்டரையும் மிரட்டுவார். உண்மையில் கருப்பு பணம் என்பது பணத்தாள்களாக இருக்காது, அது சொத்தாகவோ, முதலீடாகவோ தான் இருக்கும் என்பது பிரமாண்ட இயக்குநருக்கே தெரியவில்லை என, படம் வெளியானபோதே சமூக வலைதளங்களில் கிண்டலும், கேலியும் பறந்தன.
இவரின் பிரமாண்ட பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எந்திரன் திரைப்படம் 2010ஆம் ஆண்டில் வெளியானது. இந்த படம் 1996ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தனது ””ஜூகிபா” கதையை திருடி எடுக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். கதை திருடப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறிய உயர்நீதிமன்றம், ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஷங்கரின் மனு, அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான உருவான 2.O வெற்றியடைந்ததா இல்லையா என்பது குறித்தும் இன்றளவும் சந்தேகக் குரல்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக தாமதமாகி வரும் இந்தியன் – 2 படத்தை முடித்துக் கொடுக்காமல், ஷங்கர் வேறு படத்தை இயக்கக்கூடாது என லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஷங்கர் புதிதாக ஒரு படத்தை இயக்க இடைக்கால தடை விதிக்க மேல்முறையீடு செய்யலாம் என்றும், லைகா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சூழலில் தான் இந்தியன்-2 படத்தை முடிக்கும் முன்பே, அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில் வெளியான அந்நியன் திரைப்படத்தை, ரன்வீர் சிங் நடிப்பில், பென் ஸ்டுடியோஸ் ஜெயந்திலால் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில்தான் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
ஆனால் அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், ரீமேக் செய்வதற்கான உரிய அனுமதியை ஷங்கர் தன்னிடம் பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்தால், அது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார். திரைப்படங்களில் சட்டதிட்டங்களை வலியுறுத்தும் ஷங்கர் நிஜவாழ்க்கையில் அதனை பின்பற்றுகிறாரா என்று கேள்வி எழுப்புகின்றனர் கோடம்பாக்கவாசிகள்.
Discussion about this post