இந்த ஆண்டு 22 தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த போவதில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 537 தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பை புதுப்பித்து வர வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காத தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,
அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பாக விண்ணப்பிக்காத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும்,
ஏற்கனவே அந்த கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தங்களது படிப்பு காலம் முடியும் வரை அந்த கல்லூரிகளிலேயே தொடர்ந்து படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 250 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில், 92 பொறியியல் கல்லூரிகள், கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததுடன், உரிய விளக்கமும் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இளநிலை பிரிவின் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாகவும், முதுநிலைப் பிரிவின் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகவும் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post