கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜா சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவையாறில் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது.
காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், அவர் மறைந்த தினத்தன்று ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 172-வது ஆராதனை விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. 5வது நாளான இன்று முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி நடைபெற்றது.500-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே இடத்தில் சங்கமித்து தியாகராஜர் பாடிய நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம் உள்ளிட்ட 5 ராகங்களில் பாடப்பட்ட பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர். நாகஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், கடம் என்று கர்நாடக இசையின் பக்க வாத்தியக் கலைஞர்களின் இசைப்புடன் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பிரபல கர்நாடக இசை கலைஞர்களான சுதா ரகுராம், மகாநதி சோபனா,காயத்ரி, வீணை காயத்ரி போன்றோர் இசையஞ்சலி செலுத்தினர்.
Discussion about this post