எரிக்ஸன் நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தாத அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு, 4 வாரத்தில் நிலுவை தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், அனில் அம்பானிக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை. எனினும், நிலுவைத் தொகையை நான்கு வாரத்திற்குள் செலுத்தாவிட்டால், மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் எரிக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அந்த நிறுவனத்துக்கு 1,600 கோடி தர வேண்டி இருந்தது. இதையடுத்து, நீதிமன்றம் மூலம் சென்டில்மென்ட் தீர்வு காணப்பட்டு, 550 கோடி பெற்றுக்கொள்ள, எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்தத் தொகையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்காததால், உச்ச நீதிமன்றத்தை அணுகியது எரிக்ஸன் நிறுவனம்.
நீதிமன்ற உத்தரவுப்படி, சட்ட விதிகளை மதிக்கவில்லை என்று எரிக்ஸன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், குறிப்பிட்ட தேதி கடந்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி அந்த தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
Discussion about this post