இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையரில் ஆண்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் இணை 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், கலப்பு இரட்டையரில் நடந்த போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, மெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இணை, ஃப்ரான்ஸின் ஃபாப்ரின் மார்டின், அமெரிக்காவின் ரகுவல் அட்டவோ இணையை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் 37 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் முர்ரே, செரீனா இணை 7-5, 6-3 என்ற நேர் செட் கணகில் மார்ட்டின், அட்டோவா இணையை எளிதில் வீழ்த்தியது. இதன்மூலம் முர்ரே, செரீனா இணை மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
அதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் செக் குடியரசின், பர்போரா ஸ்ட்ரைகோவா இங்கிலாந்தின் ஜோன்னா கொண்டாவை எதிர்கொண்டார். ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ட்ரைகோவா 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜோன்னாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் காலிறுதியில் நடந்த மற்றோரு போட்டியில், பிரபல அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், சகநாட்டவரான அலிசன் ரிஸ்கேவை எதிர்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்போட்டியில், 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றிய செரீனா, 2-வது செட்டை 4-6 என்ற கணக்கில் பறிகொடுத்தார்.
இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது செட்டை, மீண்டும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் செரீனாவும், ஸ்ட்ரைகோவாவை எதிர்கொள்ள உள்ளார்.
இதேபோல், பெண்கள் காலிறுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல வீராங்கனையான எலினா ஸ்விடோலினா, செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார். 7-5, 6-4 என்ற செட் கணக்கில் முசோவாவை வீழ்த்திய ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல், பெண்கள் காலிறுதியின் மற்றொரு போட்டியில், பிரபல ரூமேனியா வீராங்கனை சிமோன ஹாலெப், சீனாவின் ஷூவாய் ஸாங்கை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஷூவாய் ஸாங்கை எளிதில் வீழ்த்திய சிமோன ஹாலெப் அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில், ஸ்விடோலினாவை எதிர்கொள்ள உள்ளார்.
Discussion about this post