மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சீனாவின் மனமாற்றம் முக்கிய பங்கு வகித்தது. சீனாவின் இந்த மனமாற்றத்திற்கு அரசியல் வல்லுநர்கள் எதையெல்லாம் கூறுகிறார்கள் என பார்ப்போம்.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக ஐ.நா.சபையில் இந்திய அரசு கோரிக்கை வைத்து வந்தது. தற்போது அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா.வில் 4 முறை தீர்மானங்கள் கொண்டு வந்தபோதும், வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மசூத் அசாரைக் காப்பாற்றிய சீனா, தற்போது அவரைக் கைவிட்டுள்ளதே, இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம். சீனாவின் மன மாற்றத்துக்குப் பின்னணிகளாக அரசியல் வல்லுநர்கள் எதையெல்லாம் கூறுகிறார்கள் என பார்ப்போம்.
கடந்த 2018ல் சீனாவுக்கு 2 நாட்கள் அரசுமுறைப் பயணம் செய்தார் பிரதமர் மோடி, அப்போது மசூத் அசார் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் புல்வாமா தாக்குதலில் மசூத் அசாரின் தீவிரவாத அமைப்பு ஈடுபட்டதால், சீனாவுக்கு இந்திய அரசால் அதிக அழுத்தம் கொடுக்க முடிந்தது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தன. மீண்டும் மீண்டும் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா.வில் கொண்டு வந்து, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தின.
ஐ.நா.வில் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளில் சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் மசூத் அசாரை ஆதரிக்கவில்லை. இந்தநிலையில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை பொது வாக்கெடுப்புக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டன. அப்போது சீனா மசூத் அசாருக்கு ஆதரவாக வாக்களித்தால் சீனா பயங்கரவாத ஆதரவு நாடாக பார்க்கப்படும் என்பதாலும் சீனா முந்திக் கொண்டது.
சீன ஆதரவு நாடான இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், சீனா இன்னொரு தீவிரவாத அமைப்பை ஆதரிப்பது பொருத்தமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. இதனாலும் சீனா தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்தது.
பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இனி, அவரால் பயனில்லை என்பதால், மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் பெரிதாக எதிர்க்கவில்லை என்று கருதப்படுகிறது.
Discussion about this post