வேலூர் மக்களவை தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கூடுதலாக 72 படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 13 பறக்கும் படை, 13 நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்னர். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வேலூரை அடுத்த புதுவசூரில் ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேரும், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் தூக்கி வீசிய பையில் 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலையிடம் பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post