சட்டப்பிரிவு 370 எனும் சிறப்பு அந்தஸ்து இல்லாமலேயே தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்களது மொழி மற்றும் கலாச்சாரங்களை பாதுகாத்து வருகின்றன என உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கம் தொடர்பான எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் பேசினார். அப்போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதால் தான் காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன என்றும், காஷ்மீர் இளைஞர்கள் ரத்தம் சிந்துவதை தடுப்பதற்கே, அங்கு சட்டப் பிரிவு 370 நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே சட்டப் பிரிவு 370 இத்தனை ஆண்டுகளாக பயன்பட்டு வந்தது என்று கூறிய அவர், எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிராக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனங்கள் முறையிட்டாலும், மக்களின் நலனை காக்கும் வகையில் சட்ட விதிகளின் படி அரசு தொடர்ந்து செயல்படும் என கூறினார்.
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பிறகு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும், யூனியன் பிரதேச முடிவு தற்காலிகமானது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
Discussion about this post