முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் இது அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்திற்கு பின்னர் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதனால் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முத்தலாக் மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இஸ்லாமிய பெண்கள் நீதியை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக் குழுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். ஆனால் மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அவர்கள் மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முத்தலாக் மசோதா நிறைவேறியதை உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரதாபாத்தில் இஸ்லாமிய பெண்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Discussion about this post