ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதற்குச் சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கக் கோரியும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் கடந்த ஆறு மாதக்காலமாகப் பொதுமக்கள் போராடி வருகின்றனர். சீன அரசு காவல்துறையினரைக் கொண்டு அவர்களைக் கடுமையாக ஒடுக்கி வருகிறது. இந்நிலையில் ஹாங்காக் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சட்டம் என்னும் பெயரிலான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தச் சட்ட மசோதாவுக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தால் ஹாங்காங் அரசின் மீதும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீதும் அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதிக்கும். மனித உரிமைகள் மதிக்கப்படுகிறதா என்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை ஆண்டுதோறும் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கினால்தான் சிறப்பு வணிக நகரம் என்கிற தகுதியை ஹாங்காங் தக்க வைக்க முடியும்.
மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் கண்ணீர்ப்புகைக் குண்டு, எரிச்சலூட்டும் ஸ்பிரே, ரப்பர் குண்டுகள் ஆகியவற்றை ஹாங்காங்குக்கு விற்பதைத் தடை செய்யும் மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, இந்த மசோதாக்களைச் சட்டமாக்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
Discussion about this post