இரட்டை கோபுரம் மீதான தீவிரவாத தாக்குதலை விட வேதனை தரும் சூழ்நிலையை, கொரோனா பாதிப்பால் இந்த வாரம் அமெரிக்கா சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு, ஜப்பான் படையினர் நடத்திய Pearl harbour தாக்குதல், ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை விட கடுமையான நெருக்கடியை அமெரிக்க மக்கள் இந்த வாரம் சந்திக்க போகிறார்கள் என்று அமெரிக்க அரசின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளும் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா மிக மோசமான பாதிப்பை நாள்தோறும் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 9,618 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு வாரங்கள் அமெரிக்க மக்களுக்கு மோசமானதாக இருக்கும் என்பதால் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ் மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்து உள்ளார். அமெரிக்க வரலாற்றில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கப் போகிறது என்றும், இந்த கடினமான நாட்களை சமாளிக்க அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட பங்களிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வாஷிங்டன், கலிபோர்னியா பகுதிகளில் வரும் வாரம் அதிகளவில் உயிரிழப்புகள் இருக்கும் எனக் கணித்துள்ள அமெரிக்க அரசின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ், நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்க மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post