அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் புறப்பட்டார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற முதலமைச்சரின் முன்னிலையில், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உட்பட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பால் பண்ணையை பார்வையிட்டார். நியூயார்க் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டங்களில் தமிழகத்தில் தொழில் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 80 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்துள்ளதோடு, 26 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்திற்கு சென்ற முதலமைச்சர் மின்சார கார் தயாரிப்பை பார்வையிட்டார்.
பிறகு, லாஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புறநகர் பகுதியான அனஹீம் என்னுமிடத்தில் உள்ள கழிவுநீர் மறுசுழற்சி செய்யும் நிலையத்துக்குச் சென்றார். நீரை மறுசுழற்சி செய்யும் ஆலையைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் ஆலைக்குக் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கழிவறைப் பயன்பாட்டுக்கும், வேளாண்மைக்கும் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து துபாய்க்கு புறப்பட்டார். 2 நாட்கள் துபாயில் இருக்கும் முதலமைச்சர், தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். அதைத்தொடர்ந்து வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்யும் அவர் 10ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
Discussion about this post