கோடை காலத்தில் அனைவரும் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல, புத்துணர்வு பெற உகந்த இடம் தான், தேனி மாவட்டத்தில் இருக்கும் மேகமலை. இது பற்றிய ஓர் செய்தித்தொகுப்பை காணலாம்.
ஆங்காங்கே உருகி விழும் அருவிகள், பசுமை போர்த்திய பள்ளத்தாக்குகள், மரங்கள் அடர்ந்த வனப்பகுதி என எங்கும் பசுமை போர்த்தி கிடக்கிறது மேகமலை. போதாக்குறைக்கு மலையெங்கும் தவழும் மேகக்கூட்டங்களை காணக்கண் கோடி வேண்டும். மேற்குத் தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாகவும் விளங்குகிறது. எங்குமே காணமுடியாத சிறப்பான நில அமைப்பைக் கொண்ட மேகமலை ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு. 1920-களில் ஆங்கிலேயர்கள் இங்கு தேயிலை தோட்டங்களை அமைத்தனர். தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அந்தத் தேயிலை தோட்டங்கள் பரந்து விரிந்துள்ளன.
இதையெல்லாம் அறிந்து மேகமலைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஒரே கட்டமாக 90 கோடி ரூபாய் ஒதுக்கியதால் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான மலைச்சாலை தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது. 34 கிலோமீட்டர் நீளம் கொண்ட மலைச் சாலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து செல்லும்போது வழியெங்கும் வழிமறைக்கும் மேகங்களுக்கு நடுவே, மெதுவாக ஊர்ந்து செல்லும் அனுபவம் வேறெங்கும் கிடைக்காது. இந்த பகுதியில் பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியசாக இருப்பதால் எப்போதும் இதமான குளிர் நிலவுகிறது
ஹைவேவிஸ் மேலணை, கீழணை, தூவானம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலையைச் சுற்றி 5 அணைகள் உள்ளன. மேகமலையில் யானைகள் மிக அதிகம். மேகமலை மக்களோடு பழகிய யானைகள் மற்றும் காட்டு மாடுகள் மனிதர்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. மேகலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு எனத் தனியாக காட்டேஜ்கள் இருந்தாலும், பேரூராட்சியின் சார்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு 3 பேர் தங்கும் அறைக்கு 750 ரூபாயும் 4 பேர் தங்கும் அறைக்கு ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
மேகமலைக்குச் தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து காலை, மாலை இரு நேரங்களில் பேருந்து வசதி உள்ளது. சொந்த வாகனத்திலும் செல்லலாம். வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக, காலை 6 மணிக்கு மேல் மற்றும் மாலை 6 மணிக்குள் மட்டுமே சோதனைச் சாவடியை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். சில்லென்ற காற்று, இதமான சூழல், கொஞ்சும் மேகம், முத்தமிடும் சாரல் என அனுபவிக்க ஏராளம் இருக்கும் மேகமலைக்கு நாமும் ஒருமுறை சென்று வரலாம். நியூஸ் ஜெ செய்திகளுக்காக தேனியில் இருந்து செய்தியாளர் ராதாகிருஷ்ணன்
Discussion about this post