இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தாருக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி வீடுகள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவிற்கு கடந்த 2007ஆம் ஆண்டு வீடு சென்னை தியாகராய நகரில் வீடு ஒதுக்கப்பட்டது. அவர் வசித்த வீடு பழுதடைந்து காணப்பட்டதால் வீட்டை அவரே பழுது பார்த்து வசித்து வந்தார். இதையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு பழுதடைந்த 119 குடியிருப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து குடியிருப்புதாரர்கள் தாமாக வீடுகளை ஒப்படைத்தனர். அதன்படி 96 வீடுகள் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 11ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவும் வீட்டை ஒப்படைத்துவிட்டார். கக்கன் குடும்பத்தினர் இன்னும் வீட்டை ஒப்படைக்கவில்லை. சமூகத்தில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு பொது ஒதுக்கிடு முறையில் வீடு வழங்க உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி விரைவில் புதிய கொள்கை இறுதிசெய்யப்பட உள்ளது. இக்கொள்கை உறுதி செய்யப்பட்டவுடன் நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தாருக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்லக்கண்ணுவிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு வசதி வாரியத்தின் இல்லத்தில் இருந்து வெளியேறி உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு விரைவில் வீடு ஒதுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நல்லகண்ணுவிற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post