ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகளை நாளை முதல் நிபந்தனையுடன் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டுமே படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது கண்டிப்பாக பார்வையாளர்கனை அனுமதிக்கக்கூடாது எனவும், பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது எனவும் ஊரக பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post