சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரையும், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோர் குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இருவரையும், நாகர்கோவிலில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகளை 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி இன்றைக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். இன்றைய விசாரணையின் போது, குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி காவல்துறையினர் அளித்த மனுவை ஏற்று கொண்ட முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அருள் முருகன், குற்றவாளிகள் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
Discussion about this post