நியூசிலாந்தில் 2 மசூதிகளில் தாக்குதல் நடத்தி 51 பேரைக் கொன்ற தீவிரவாதி எழுதிய கடிதம் ஒன்று இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பிரண்டன் டாரண்ட் என்ற 28 வயதேயான தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
பிரண்டன் மீது 51 பேரை கொலை செய்தது மற்றும் 40 பேரை கொலை செய்ய முயற்சி செய்தது ஆகிய காரணங்களுக்காக மொத்தம் 92 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவன் ஆக்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், சிறைக்கு உள்ளிருந்து பிரண்டன் எழுதிய ஆறு பக்கக் கடிதம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி தற்போது உலகெங்கும் வைரலாகி வருகிறது.
அந்தக் கடிதத்தில் அரசியல் மற்றும் சமூகம் குறித்த பல சர்ச்சைக்குரிய விமர்சனக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. வன்முறையைத் தூண்டும் வகையில் அது எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், இப்படி நடந்தது விரும்பத்தகாத செயல் என்றும், இனி இப்படி நடக்கக் கூடாது என்றே தானும் நியூஸிலாந்து மக்களும் விரும்புவதாகவும் கருத்து தெரிவித்தார்.
இதுவரை வெளியே இருந்தவர்களுக்கு டாரண்ட் எழுதிய ஒன்பது கடிதங்களில் இரண்டுமட்டுமே தற்போது நியூஸிலாந்து சிறைத்துறையின் வசம் உள்ளது. இனி அபாயகரமான கைதிகளின் கடிதங்களை படித்த பின்னரே வெளியே அனுப்புவது என்பது குறித்து நியூஸிலாந்து அரசு சிறைத்துறைக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
Discussion about this post