உலகப் பணக்காரர்களில் ஒருவரும், சீனாவின் முதல் நிலைப் பணக்காரருமான ஜாக் மா தனது அலிபாபா நிறுவனத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். குடிசையில் இருந்து அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு வளர்ந்த ஜாக் மா யார்? அவரது பின்னணி என்ன? இது பற்றிய சிறப்பு தொகுப்பு
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமம் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு 1999ல் இதனை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய சீனர்தான் ஜாக் மா.
ஏழை குடும்பத்தில் இருந்து வந்த அவர், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்கும் கனவுடன் மொழி பெயர்ப்பு நிறுவனம் ஒன்றை சீனாவில் தொடங்கிய ஜாக் மா, அதில் பெரும் தோல்வியைக் கண்டார். பின்னர், ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைன் வர்த்தகத்தைப் பார்த்து 1999ஆம் ஆண்டில் ஹங்க்சோவில் அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார்.
சீனாவில் இணையம் அறிமுகமாகும் முன்பே இவரது அலிபாபா நிறுவனம் தனது பயணத்தைப் பல போராட்டங்களுக்கு மத்தியில் தொடங்கியது. ஈபே போன்ற பெரிய நிறுவனங்களை முட்டி மோதி வென்றது. பலகட்ட வளர்ச்சிகளுக்குப் பின்னர் ஜாக்மா சீனாவின் முதல் நிலைப் பணக்காரர் ஆனார். கடந்த 2018ஆம் ஆண்டில் போர்ப்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 21ஆம் இடத்தை ஜாக் மா பெற்றார்.
அதே 2018ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து, அனைவரையும் ஆச்சர்யப்படவும் வைத்தார் ஜாக்மா. அப்போது சொன்ன சொல்லைத்தான் ஜாக் மா காப்பாற்றினார்.
தனது 55ஆவது பிறந்த நாளின் போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தொழில் தொடங்கப்பட்ட சீன நகரமான ஹங்க்சோவில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் முழுமையாகப் பதவி விலகினார் ஜாக் மா. இனி அலிபாபா குழும தலைவராக ஜாக் மாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட டேனியல் ஜாங்க் பதவி வகிப்பார். தற்போது அலிபாபா நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஜாக் மா ஒரு சிறந்த பேச்சாளர், நல்ல வழிகாட்டி, ஆடல், பாடல், இசை, தற்காப்புக் கலைகள் என அனைத்திலும் ஆர்வம் கொண்டவர். சில சமயம் இவர் சர்ச்சைகளுக்கு ஆளாகி இருந்தாலும் கூட, நேர்மறை எண்ணங்களுக்காக அதிகம் விரும்பப்பட்டவர். தனது விடைபெறும் நிகழ்ச்சியில் கூட ராக் ஸ்டார் தோற்றத்தில் வந்து மக்களை
மகிழ்ச்சிப்படுத்தியவர்.
வெறும் கனவுகளை மட்டும் வழிகாட்டிகளாகக் கொண்டு, கூரை வீட்டில் இருந்து வந்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஜாக் மா, ஆசிய இளைஞர்களின் சிறந்த வழிகாட்டிகளில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.
Discussion about this post