உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 7:30 மணிக்குத் தொடங்குகிறது. அதையொட்டி, ஜல்லிக்கட்டைக் காண ஏராளமான வெளி நாட்டுப் சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூரில் முகாமிட்டுள்ளனர்.
அலங்காநல்லூர் என்றால் ஜல்லிக்கட்டு… ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர்… என்று சொல்லும் அளவுக்கு, உலகளவில் பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை தொடங்குகிறது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கோட்டை முனியசாமி கோவிலில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில், களமிறங்குவதை மாடுபிடி வீரர்கள் தங்களின் தனி கௌரவமாகக் கருதுகின்றர். அந்தவகையில், இன்று நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 920 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர். 700 காளைகள் களத்தில் சீறிப்பாய உள்ளன. சிறந்த மாடுபிடி வீரருக்கும், மாடுபிடி வீரர்களைத் தெறிக்கவிடும் சிறந்த காளைகளுக்கும் கார்கள் உள்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூருக்கு வந்துள்ளனர். அவர்களுக்காக சிறப்பு இருக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு கேலரி மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post