உலகின் பல முன்னணி நிறுவனங்களில் சிஇஓ போன்ற உயர் பதவிகளை இந்தியர்கள் அலங்கரிக்கும் சூழலில் தற்போது உலக வங்கியின் தலைவர் பதவி இந்தியர் கைக்கு வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்ததில் இருந்து அடுத்த உலக வங்கியின் தலைவர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அந்த சமயத்தில்தான் உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க வாழ் இந்தியரான அஜய் பங்காவை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.
யார் இந்த இந்த அஜய் பங்கா…?
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிறந்தார் அஜய் பங்கா. டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள IIM (இந்திய மேலாண் நிறுவனம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்த அஜய் பங்கா, அதன்பிறகு நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார். மேலும் பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்ட இவர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் உலக வங்கியை வழிநடத்த அஜய் தனித்துவம் வாய்ந்தவர் என்றும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான, உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்துள்ள அஜய் பங்கா, உலக வங்கி தலைவர் பதவிக்கு சரியான நபராக இருப்பார் என்றும் கூறுகிறார்கள் அமெரிக்க அதிகாரிகள். குறிப்பாக உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் அஜய் பங்கா என்பதால் உலக வங்கியின் தலைவர் பொறுப்பை ஏற்பாரா என்று இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.