ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனு குறித்த வழக்கினை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கைது செய்யப்படாமல் இருக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கான இடைக்கால தடையை நீடித்து வந்தது.

இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதனையடுத்து வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தடையை நீடித்து வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Exit mobile version