அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து இந்தியாவில் பாரத் புகைவிதி 6 அமலாகின்றது. இதனால் பி.எஸ்.4 ரக வாகனங்களை 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து விற்கவோ, பதிவு செய்யவோ முடியாது.
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையானது உலகெங்கும் காற்று மாசுபாட்டை மிக அதிக அளவில் உயர்த்தி உள்ளது. கருவில் உள்ள குழந்தையைக் கூட இது பாதிக்கின்றது.
இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் சுவாசம் தொடர்பான நோய்களால் இறக்க இந்தக் காற்று மாசுபாடு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 3% தொகை புகையால் ஏற்படும் நோய்களின் மருத்துவத்திற்காக வீணாகின்றது.
வளர்ந்த நாடுகள் ஏற்கெனவே மாசுக் கட்டுப்பாட்டிற்காக வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் பல புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி இந்தியாவும் புதிய விதிகளை அமல்படுத்தியது. இது பாரத் ஸ்டேஜ் 1 அல்லது பாரத் புகைவிதி 1 – எனப் பெயரிடப்பட்டது. இதையே மக்கள் பி.எஸ்.1 என அழைத்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே பல பி.எஸ். விதிகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய பி.எஸ். விதிகள் அமலாகும் ஒவ்வொரு முறையும் வாகனப் புகையில் உள்ள கந்தகம், ஈயம் ஆகியவற்றின் அளவு பெருமளவு குறையும்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பி.எஸ்.2 விதிமுறைகளும், 2005ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பி.எஸ்.3 விதிமுறைகளும் இந்தியாவில் அமலுக்கு வந்தன. ஆனாலும் காற்று மாசு போதிய அளவுக்குக் குறையாததால், 2010 ஆம் ஆண்டு அக்டோபரில் பி.எஸ்.3 விதிகள் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரலில் பி.எஸ்.4 விதிகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டன.
இந்தியாவின் மாசுக் கட்டுப்பாடு, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதால், பி.எஸ்.5 விதிகளுக்குப் பதிலாக பி.எஸ்.6 விதிகள் அடுத்த ஆண்டு நேரடியாக அமல்படுத்தப்படுகின்றன. பி.எஸ்.6 விதிகளால் ஏற்கெனவே விற்பனையில் உள்ள பல வாகனங்கள் சந்தையில் இருந்து விடைபெறும். ஆனாலும் சுற்றுச் சூழல் மேம்பாடு மற்றும் பொது மக்களின் ஆரோக்கியம் இவற்றுக்காக நாம் பி.எஸ்.6 விதிகளை வரவேற்க வேண்டியது இன்றியமையாதது.
Discussion about this post