ஏ.என். 32 ரக போர் விமான விபத்தில் உயிரிழந்த விமானபடை வீரர் வினோத்தின் உடல் விமானப் படை வீரர்களால் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த மூன்றாம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ என் 32 ரக போர் விமானம் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சலப்பிரதேசம் சென்றபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய விமானப்படை வீரர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், கடந்த வாரம் விமானம் விபத்துக்குள்ளானது என்றும்,அதில் சென்ற 13 வீரர்களும் உயிரிழந்தனர் என்றும் தெரியவந்தது. இந்நிலையில் நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. இந்த விபத்தில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட வினோத் ஹரிஹரனின் உடல், கோவை சிங்காநல்லூரில் உள்ள அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. வினோத்தின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத்த காட்சி அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.