அதிமுகவின் சாதனை விளக்கப்பொதுக்கூட்டங்கள் வரும் 21-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடக்கும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆரின் 103-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பொதுக்கூட்டங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதே போல், இந்தியாவிலேயே மிகச்சிறந்த நல்லாட்சி நடைபெறும் மாநிலம் என்ற அங்கீகாரத்தை தமிழ்நாடு பெற்றதையும், நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக பெற்றிருக்கும் வெற்றியின் சிறப்புகளையும் கூட்டங்கள் விளக்குவதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் மக்கள் செல்வாக்கு மற்றும் மகத்தான வெற்றிகளையும் இந்த பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் விளக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், மாநகராட்சி பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் 25ந்தேதி கழக மாணவர் அணியின் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட கழக செயலாளர்கள், கட்சியின் அனைத்து பிரிவினர்களுடன் இணைந்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை கட்சி தலைமைக்கும், நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
Discussion about this post