அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் விடுதிக்கு திரும்பிய போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு அதிமுக சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது அதிமுக சார்பாக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அதிமுகவினரை தவிர, அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த மற்ற யாருக்கும் தார்மீக உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.
சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை என சுட்டிகாட்டிய கே.பி.முனுசாமி, உறுப்பினர் இல்லாத நபரை நாங்கள் ஏன் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயல்படும் கட்சி தான் உண்மையான அதிமுக என்றும், அவர்களுக்கே இரட்டை இலை சொந்தம் என்றும் தேர்தல் ஆணையம் இறுதி தீர்ப்பு வழங்கியதாக தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து முறையிட்டு சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு செல்லும் என கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அமைச்சர் சி.வி.சண்முகம் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post