வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் ஏதேனும் தில்லுமுல்லு பணிகளில் ஈடுபடுகிறார்களா என முகவர்கள் விழிப்போடு இருந்து கண்காணிக்க வேண்டுமென அதிமுக தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்கள் வெளியிடும் எக்சிட் போல் கணிப்புகள், அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்து, வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி, ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே தவிர வேறல்ல என குறிப்பிட்டுள்ளனர்.
2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் அதிமுக மீண்டும் வெற்றிபெறாது என கூறியதை நினைவுகூர்ந்துள்ள அதிமுக தலைமைக் கழகம்,ஆனால் அதனை பொய்த்துப் போகச் செய்து, புரட்சித்தலைவி ஜெயலலிதா அறுதிபெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் என கூறியுள்ளது.
நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல், அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அதிமுக தலைமை, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், முகவர்களும் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே கவனமாக இருந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
வதந்திகளை பரப்புவதிலும் , தில்லுமுல்லு செய்வதிலும் , வன்முறையில் ஈடுபடுவதிலும் திமுகவினர் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே அறியும் எனக் கூறியுள்ள அதிமுக தலைமை,
திமுக-வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடு ஏதேனும் நிகழ்ந்தால்,அது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்த பின்பே, முகவர்கள் வெளியே வர வேண்டுமென்றும் அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
வரலாறு வியக்கும் வகையில், இந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்று, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்வோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post