மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கு ஒரு ரூபாய் ஊதியம் கொடுத்ததன் மூலம், மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றியுள்ளார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் கைது செய்து அவருக்கு மரண தண்டனையும் விதித்தது. குல்பூஷண் ஜாதவ்வின் மரண தண்டனை எதிர்த்து, இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையில் குல்பூஷண் ஜாதவ்வின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. குல்பூஷண் ஜாதவ்விற்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தனக்கு சம்பளமாக வெறும் 1 ரூபாய் மட்டும் கொடுக்க வேண்டும் என அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜிடம் கோரினார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 6ந் தேதி சுஷ்மா சுவராஜ் காலமானார். குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தான் வென்றுவிட்டாலும், விலைமதிக்க முடியாத ஒரு ரூபாய் ஊதியம் பெற முடியாமல் போனது என, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அண்மையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கு சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஒரு ரூபாய் ஊதியமாக வழங்கினார். ஹரிஷ் சால்வேவிற்கு ஒரு ரூபாய் ஊதியம் கொடுத்ததன் மூலம், தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளதாக பன்சூரி தெரிவித்தார்.
Discussion about this post