இந்தியாவில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தில் வகை செய்ய வேண்டும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மசோதாவுக்கு அதிமுக ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில் தங்கள் ஆலோசனைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைப்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும் என ஜெயலலிதா தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி விஜிலா பேசினார். அதனால்தான் முழு உரிமை கிடைக்கும் வரையிலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் இந்திய அரசின் முடிவை அதிமுக எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முழுச் சுதந்திரத்துடன் தன்மானத்துடன் வாழவும் தனி ஈழம் பெறும் அவர்களின் நோக்கத்தை அடையவும் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் இங்கேயே பிறந்தவர்கள் என்பதையும், பலர் 25 ஆண்டுகள், 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வாழ்ந்து வருபவர்கள் என்பதையும் விஜிலா சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.