அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், தமிழர்களுக்கு நிம்மதி என்னும் நிழல் தரும் ஆலமரம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கு தொண்டாற்ற கிடைத்த கருவி தானே தவிர, பதவிக்காக செயல்படும் சிந்தனை யாருக்கும் கிடையாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த குறிக்கோள் நிறைவேற உயர்நீதிமன்ற தீர்ப்பு உதவுவதால் அதனை வரவேற்பதாக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தந்து, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு உழைக்கும் போது, அதிமுக புதிய புறநானூறு படைக்கும். அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் வீழ்த்தும் பெரும் படையாக உருவாகும். சில தவறான வழிகாட்டுதலின் விளைவாக மாற்றுப்பாதையில் பயணிக்க சென்றவர்கள், நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்திய மகத்தான இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும் என முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
Discussion about this post