அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், தலைமைக் கழக அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ள சுமார் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக அழைப்பிதழோடு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக கட்சி அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் போது, அலுவலகத்தின் முதல் தளத்தில் தான் நடைபெறும். அனைவரும் அங்கு அமர்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஆனால், இம்முறை கொரோனாவால், தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில், மூன்று இடத்தில் நிர்வாகிகள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தின் முதல் தளத்திலும், ஒரு பிரிவினர் தரை தளத்தின் பக்கவாட்டிலும், மற்றொரு பிரிவினர் அலுவலகத்தின் பின்புறத்திலும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரை தளத்தில் அமரக்கூடியவர்கள் மேல் தளத்தில் நடப்பதை காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடத்திய பிறகே, செயற்குழுக் கூட்டத்துக்கு செல்ல நிர்வாகிகள் அனுமதிக்கப்படுவர்.
Discussion about this post