சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம், திமுகவினரால் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக தலைமையகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி அமையப்போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே, திமுகவினரின் வன்முறையும், அரசியல் அநாகரீகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளனர். உலகமே வியந்து நோக்கி, எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டிய கருணைமிகு திட்டம் என்று பாராட்டக் கூடிய அம்மா உணவக திட்டத்தை, மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா செயல்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமழை, பெருவெள்ளம், கொரோனா பேரிடர் உள்ளிட்ட காலங்களில், பசியால் தவித்த பலருக்கு உணவு வழங்கிய அம்மா உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும் என்றும்,வேதனை தரும் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது, திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post