கடந்த 2-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர், இன்று நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது, உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றன. மறுநாள் 3-ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய தினம் சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 4-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடங்கியது.
இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2018-2019 ம் ஆண்டுக்கான முதல் துணை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கஜா புயல் நிவாரனத்திற்கு 2 ஆயிரத்து 228 கோடி ரூபாய் ஒதுக்கீடு, போக்குவரத்து துறைக்கு 998 கோடி ரூபாய் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளுக்கு 6 ஆயிரத்து 431 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை அளித்து பேசினார். இந்த கூட்டத்தொடரில் 12 சட்ட முன்வடிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரைக்கு பின்னர் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
Discussion about this post