இந்தியாவின் முதன்மை பணக்காரர்களின் வரிசையினை எடுத்துக்கொண்டால் அதில் கெளதம் அதானிக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும். சமீபத்தில் அதானியின் குழுமம் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் 2.67 லட்சம் கோடி ரூபாய் இழப்பினை அவரது நிறுவனம் சந்தித்துள்ளது. குறிப்பாக அதானியின் டோட்டல் டோட்டல் கேஸ் கம்பெனி 76,000 கோடி இழப்பினையும், அவரது டிரான்ஸ்மிஷன் நிறுவனம் 63,700 கோடி சந்தை இழப்பினையும் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கும் 15% வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. அவரது பிற பத்து நிறுவனங்களின் வீழ்ச்சி 12% சரிவினைக் கண்டுள்ளது. 12% என்பது 16.83 லட்சம் கோடியாகும். முன்னர் குறிப்பிட்ட நிறுவனங்களான அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 13.41% சரிவினைக் கண்டு, 2175 ரூபாயாக வர்த்தகமாகியது. இதே அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலையானது 14.88% குறைந்து, 3118.60 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
அதானி கீரின் நிறுவனம் 35,562 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பினை கடந்த இரண்டு அமர்வுகளில் கண்டுள்ளது. இதே அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ஒவ்வொன்றும் 14,000 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி பவர் நிறுவனங்கள் 10,000 கோடி ரூபாய் மதிப்பினையும் இழந்துள்ளன. அதானி வில்மர் நிறுவனம் மற்றும் ஏசிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7200 கோடி ரூபாய் சரிவினையும் கண்டுள்ளது.
இதற்கு காரணமாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது செய்யப்பட்ட ஆய்வே என்று கூறப்படுகிறது. அதன் வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை என பல குற்றச்சாட்டுகளை அடுக்காக முன்வைத்தது. இதற்கிடையில் தான் கடந்த ஜனவரி 25 அன்றே அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டன. ஹிண்டன் பர்க் என்பது பங்கு சந்தையில் நடக்கும் முறைகேடுகளை பற்றியும் பங்கு சந்தையில் மனிதர்கள் ஏமாற்றி பங்குகளை சரிய வைப்பதை பற்றியும், ஏற வைப்பதை பற்றியும் விசாரிக்க ஆண்டர்சன் என்பவர் ஒரு விசாரணைக் குழுவினை உருவாக்க எண்ணினார். அதாவது பங்கு சந்தையில் நடக்கும் Man made disasterகளை பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு நிறுவனம் அமைக்க முடிவு செய்தார். அப்படி தொடங்கியதுதான் ஹிண்டன்பர்க்.
இவர்களின் அறிக்கையினால் அதானி குழுமம் பண வீழ்ச்சி அடைந்து, உலக பணக்காரர் வரிசையில் பின்னடைவினை அதானி சந்தித்துள்ளார். இவரது பொருளாதார வீழ்ச்சி நாட்டின் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களையும் பாதித்துள்ளது. அவை எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகும். இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இதனால் இந்திய மக்களின் பொருளாதார வாழ்வில் ஏற்றமில்லாமல் பின்னடைவு ஏற்பட அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி இதனைப் பற்றி கருத்து தெரிவிக்கின்ற போது “அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால், இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை” என்றும் ”அண்மைக் காலத்தில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. வங்கி முதலீடு ஏதும் செய்யவில்லை. இனி வருங்காலத்தில் அதானி குழுமத்தில் இருந்து முதலீட்டிற்கான வேண்டுகோள் ஏதும் வந்தால், விவேகத்துடன் அதனை அணுகுவோம்” என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
தன் சந்தை மூலதன மதிப்பை மிகை மதிப்பீடு செய்தது, செயற்கையாக மதிப்பை உயர்த்திக் காட்டியது என்பதே அதன் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டினை பொய் என்றும் அவதூறு என்றும் அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது முறையான புகார் மூலம் நடவடிக்கை எடுக்கப் போவதாக அதானி குழுமம் கூறியுள்ளது.