அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கையினால் அதானி குழுமம் வீழ்ச்சியினை சந்தித்து இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஜனவரி 24ஆம் தேதி இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் தற்போது வரை அதானியின் பங்குகள் சரிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரூபாய் 20,000 கோடி மதிப்பிலான எஃப்.பி.ஓ[FPO] பங்கு விற்பனை மூலம் நிதித் திரட்டும் திட்டத்தை சமீபத்தில் அதானி குழுமம் செயல்படுத்தி இருந்தது. அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையிலும், பங்குகள் கடும் சரிவினை எட்டிய நிலையிலும் கூட அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் அதானியின் பங்குகளில் முதலீடு செய்ய வந்தன. ஆனால் சிறு வியாபாரிகள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், தங்களின்பங்குகள் ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எஃப்.பி.ஓ பங்கு விற்பனையைத் திரும்பப் பெற அதானி குழும இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. இந்த நெருக்கடிச் சூழலில் பங்கு விற்பனையைத் தொடர்வது நியாயமான செயல் அல்ல என்பதால் விற்பனை பரிவர்த்தனைத் திரும்பப் பெறுகிறோம் என்று அதானி நிறுவனம் கூறியது. மேலும் முதலீட்டாளர்களின் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடுகள் செய்யப்படும் என்றூ அதானி குழும நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடவடிக்கைத் தொடக்கப்படுள்ளது என செபி அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையினை அதானி குழுமம் எடுத்துள்ளது. மேலும் பங்குகள் தொடர்ந்து சரிந்த வண்ணம் இருப்பதால் உலக பணக்காரர் வரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த அதானி தற்போது இறக்கம் கண்டு 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை அம்பானியிடம் இழந்தார் அதானி.
Discussion about this post