ரூ.4 கோடி வரி செலுத்தாத வழக்கு: விஷால் பதிலளிக்க, நீதிமன்றம் உத்தரவு

ஊழியர்களிடம் பிடித்த வருமான வரி 4 கோடி ரூபாயைச் செலுத்தாத வழக்கில், தொகையைச் செலுத்துவதா? அல்லது வழக்கை எதிர்கொள்வதா? என்பதைத் தெரிவிக்குமாறு நடிகர் விஷாலுக்குச் சென்னை எழும்பூர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்குச் சொந்தமான திரைப்பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியத்தில் வருமான வரியாகப் பிடித்தம் செய்த 4 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்குச் செலுத்தவில்லை. இது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய நோட்டீசுக்கும் விஷால் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அன்று விஷால் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த நிலையில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து அவர் மீதான வாரண்டை நீதிமன்றம் திரும்ப பெற்றது. வருமான வரிப் பிடித்தம் செய்த தொகையைச் செலுத்தித் தீர்வு காண்பதா? அல்லது வழக்கை நடத்துவதா? என்பதை தெரிவிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version