வெள்ளிவிழா நாயகன் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் நடிகர் மோகன். என்றும் இளைஞன் போல் காட்சி அளிக்கும் அவரது 65வது பிறந்ததினம் இன்று.
1956ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் பிறந்த மோகன், நாடகங்கள் மூலம் சினிமாவில் நடிகராக தடம் பதித்தார். கமல், பாலுமகேந்திரா கூட்டணியில் கன்னடத்தில் வெளியான கோகிலா படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அவர், தமிழில் மூடுபனி படம் வழியாக அடியெடுத்து, 80 முதல் 90கள் வரையிலும் வெள்ளிவிழா நாயகனாக வெற்றிநடை போட்டார். விதவிதமான துடிப்பான துள்ளலுடன் கூடிய உடல்மொழியால் பல ஹீரோக்கள் தமிழ் சினிமா ரசிகர்களை வென்றெடுக்க, மோகனோ அசைந்தும் அசையாத தனது இயல்பான உடல்மொழியால் பேரற்புதங்கள் நிகழ்த்தினார்.
இளையராஜாவின் இசைக்கும், எஸ்.பி.பியின் தேன்மதுர குரலுக்கும் உடல்வடிவம் கொடுத்து திரையில் உலவவிட்டால் அதன் உருவம் மோகனுடையதாக இருக்கும். ரசிகர்களை மோகன் வசீகரித்ததன் சூட்சமம் இதுதான். மென்சோக பின்னணியில் ராஜாவின் ஒற்றை வயலின் இசைக்கு உருகி உருகி உருவம் கொடுக்கும் மோகன், கித்தாரில் இருந்து துளிர்விடும் இசையை பரவசப்படுத்துவதிலும் கெட்டிக்காரர்.
காதலும், காதல் தோல்வியுமே மோகனின் கதைக்களம். ஆனாலும், காதலில் கொண்டாட்டமும் இருக்காது, காதல் தோல்வியில் விரக்தியும் இருக்காது. அனைத்தையும் தனது உதட்டசைவில் பாடி பாடியே ரசிக நெஞ்சங்களை அரவணைத்துக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மைக்கின் மீது பலர் மோகம் கொண்டதற்கும், மேடை கச்சேரி கலைஞர்களாக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதிலும் மோகனுக்கு பெரும்பங்குண்டு.
பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோயில், உதய கீதம், மெளன ராகம், மெல்ல திறந்தது கதவு, கிளிஞ்சல்கள் போன்ற படங்கள் மோகன், இளையராஜா, எஸ்.பி.பி கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.
இசையை பல விதமாக ரசித்துணர்ந்த தமிழ் ரசிகர்களுக்கு, அதற்கு உருவம் கொடுத்து கொண்டாடினால் எப்படி இருக்கும் என்பதற்கு உதராணமாக இருந்தவர் தான் மோகன். அப்படி அவர் தமிழ் ரசிகர்களால் மைக் மோகனாக கொண்டாடப்பட, அவருக்கு பின்னணி குரல் கொடுத்த சுரேந்தரும் மிக முக்கியமான காரணம். இசை போல் என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என மோகனுக்கு வாழ்த்துக் கூறி மகிழ்கிறது நியூஸ் ஜெ.
Discussion about this post