மாற்று அரசியல் என்று சொல்லி கட்சி நடத்தும் நடிகர் கமலஹாசன், அவரது படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். மேலும், அந்த விவகாரத்தை திசை திருப்ப அடுத்தடுத்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நடிகர் கமலஹாசனின் இந்த செயல்பாடுகள், விபத்து குறித்த சந்தேகத்தை அதிகரிப்பதுடன், அவருடைய நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியத் திரைப்படத்துறையில் 60 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பிரபல நடிகர் கமல்ஹாசன். தமிழ் திரை உலகில் அரை நூற்றாண்டு காலம் ஆதிக்கம் செலுத்தியவர். நடன அமைப்பாளர், திரைக் கதையாசிரியர், பாடகர், கவிஞர், இயக்குனர், அரசியல்வாதி என அவ்வப்போது, கமலஹாசன் பல அவதாரங்கள் எடுத்தாலும், நடிப்புத்தான் அவருக்குப் பிரதான தொழில். திரைப்படங்களில், தான் ஏற்று நடிக்கும் பாத்திரம் பற்றிய அனைத்து நுணுக்கங்களையும், விபரங்களையும் தெரிந்து, அவற்றை தன் நடிப்பில் துல்லியமாகவும், காட்சிகளில் குறியீடுகளாகவும் வைப்பவர் கமலஹாசன்.
அன்பே சிவம் படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் வேடம், ஹேராமில் ஆர்.எஸ்.எஸ் சுயம் சேவக் வேடம், விஸ்வரூபம் திரைப்படத்தில் ஜிகாதி மற்றும் உளவாளி வேடம், தசவதாரம் திரைப்படத்தில் வைணவர் உள்ளிட்ட பத்து வேடங்கள் எல்லாம் கமலஹாசனின் ஆழ்ந்த அறிவுக்கு சான்றாக அமைந்த வேடங்கள். கமலஹாசன் இவ்வளவு மெனக்கெட்டாலும், முதுமை, இளம் நடிகர்களின் வருகை, அவர் நடித்த படங்களின் தொடர் தோல்வி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவருக்குத் திரைப்படங்கள் முற்றிலுமாக இல்லாமல் போனது. இதையடுத்து பார்ட்-டைம் தொழிலாக, தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியையும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கி நடத்துகிறார். இடையில் இரண்டையும் பாதியில் விட்டுவிட்டு, இயக்குனர் சங்கரின் இந்தியன்-2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு, பூந்தமல்லி EVP பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில், மர்மமான முறையில் கிரேன் அறுந்து விழுந்ததில், ஸ்ரீகிருஷ்ணா, மது, சந்திரன் உள்பட மூன்று திரைப்படத் தொழிலாளர்கள் பலியானார்கள். இந்தக் கோரச் சம்பவம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக, கடந்த 3-ம் தேதி கமல்ஹாசனிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மிக கண்ணியமான முறையில், கமல்ஹாசனுக்கு சட்டம் அனுமதிக்கும் வசதிகளைக் கொடுத்து அந்த விசாரணையை குற்றப்பிரிவு போலீஸார் நடத்தினர்.
ஆனால், திரைப்படங்களில் நேர்மையான, சட்டத்தை மதிக்கும் பொறுப்பான ஹீரோவாக நடித்து தனக்கான இமேஜை உருவாக்கிக் கொண்ட கமலஹாசன், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்லி கட்சி நடத்தும் கமலஹாசன், நேர்மையாக நடைபெற்ற வெறும் மூன்று மணி நேர விசாரணையைப் பொறுத்துக்கொள்ளவில்லை. விசாரணை முடிந்து திரும்பிய கையோடு, தமிழக அரசை அச்சுறுத்தும் தொனியிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ஒரு அறிக்கையை கமலஹாசன் வெளியிட்டார். கமல் கட்சி பெயரில் வெளியான அந்த அறிக்கையில், தமிழக அரசு காவல்துறை மூலமாக சாட்சி என்கிற பெயரில் தங்கள் தலைவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளார்கள் என்றும், தமிழக அரசே இந்தச் செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும் என்று எச்சரித்தும், தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும் தங்கள் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்கள் அவருக்கு அரணாக நின்று பாதுகாப்போம் என்று மிரட்டும் தொனியிலும் வாசகங்கள் இருந்தன. எனினும், இதை புறம் தள்ளியது தமிழக அரசு. இந்நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை நடத்துவதற்கு, சம்பவ இடத்தில் இருந்த கமலஹாசன், இயக்குனர் சங்கர் உள்பட 24 பேருக்கு சம்மன் அனுப்பியது குற்றப் பிரிவு போலீஸ். விபத்து எப்படி நடந்தது என்பதை நடித்துக் காட்டச் சொல்லி விசாரிக்கும் இந்த நடைமுறையை எதிர்த்து, நடிப்பில் உலகநாயகன் என்று பெயர் வாங்கிய நடிகர் கமலஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினார். அதற்கு தாக்கல் செய்த மனுவில், எப்.ஐ.ஆரில் திரைப்பட ஹீரோ என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, விபத்தில் தாம் எப்படி சம்பந்தப்பட்டேன் எனச் சொல்லவில்லை என்றும், படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து விசாரணைக்கு இதுவரை அழைக்கப்பட்டதில்லை என்றும் கூறியிருந்தார். அதைப் பொருட்படுத்தாத சென்னை உயர் நீதிமன்றம், சம்பவம் நடந்த இடத்திற்குப் போக வேண்டாம்… ஆனால், எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் கமலஹாசன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
திரைப்படத்தில் வேண்டுமானால் கமல் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், சட்டத்தைப் பொறுத்தவரை அவர் சம்பவ இடத்தில் இருந்த ஒரு சாட்சி மட்டுமே. வழக்கறிஞர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த கமலஹாசனுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அரசியல் கட்சி நடத்தும் கமலஹாசன் சட்டத்தை மதித்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்காமல், நேர்மையாக விசாரிக்கும் தமிழக அரசை மிரட்டுவதும், பிரச்னையை நீதிமன்றத்தில் திசை திருப்புவதுமாக இருந்தால், அது அவர் மீதான சட்டத்தின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை!