திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில், வேலூர் மாவட்டம் திமிரி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சொந்த ஊர் செல்வதற்காக மனைவி மற்றும் பேரனுடன் வந்திருந்தார்.
அப்போது தனியார் பேருந்து ஒன்றின் முன்பு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநர் அவரை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதால், பேருந்து அவர் மீது மோதியது.
இதில் பாலகிருஷ்ணன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை.
ஆனால் பொதுமக்கள் யாரும் அவரை உடனடியாக காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்த நிலையில், செய்தியாளர்கள் சிலர் ஆட்டோ மூலம் முதியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.
விபத்தில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றினால், காவலர்கள் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு தருவார்கள் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது.
ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் உயிரை காப்பாற்றுபவர்களுக்கு எந்த தொந்தரவும் தர மாட்டோம் என காவல்துறையும் அரசும் பல வேளைகளில் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post