கொடநாடு சம்பவம் பற்றி ஆவணப்படம் வெளியிட்ட சாமுவேல் மேத்யூ என்பவர் யார் ? இவரது பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
கேரள மாநிலம் பத்தனம்புரத்தை சேர்ந்த இவர், சில பத்திரிக்கைகளில் வேலை செய்துவிட்டு, பின்னர் தெகல்காவில் செய்தியாளராக இணைந்தார். சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவது, அதில் தொடர்புடையவர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் இவரது வாடிக்கை.2016 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மேற்கு வங்க மாநிலத்தில் சாலைத்திட்டங்களை தனக்கு வழங்க, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என குறிப்பிட்டார். தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தவே அந்த வீடியோ வெளியிடப்பட்டதாக விளக்கம் அளித்தார்.அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதன் மூலம் மேத்யூவின் வீடியோ போலியானது என்பதும், பணம் பெற்றுக் கொண்டு, வீடியோவை வெளியிட்டதும் வெட்ட வெளிச்சமானது.
இதனைத் தொடர்ந்து, பீகாரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிபி யாதவ் என்பவர் கொல்கத்தா காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மேத்யூ தன்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி இருந்தார். பணம் தராவிட்டால், தன்னை பற்றிய அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக மேத்யூ மிரட்டியதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொல்கத்தா முச்சிபாரா காவல்துறை, மேத்யூ சாமுவேலிடம் தீவிர விசாரணை நடத்தியது. மேத்யூசின் வருமான வரிக் கணக்கு, குடும்ப சொத்து விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறை உத்தரவிட்டது.
இதேபோல் உள்துறை அமைச்சகத்தின் ரகசிய ஆவணங்களை அத்துமீறி திருடிய குற்றச்சாட்டில் மேத்யூஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.இவ்வாறாக, பெரிய நபர்கள் பற்றிய தகவல்களை திரட்டி, அதனை திரித்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்ட சாமுவேல் மேத்யூ தற்போது, கோடநாடு விவகாரத்திலும் அதையே கையாள முயல்வதாக தெரிகிறது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி, போலி வீடியோவை வெளியிட்டு, திரிணாமுல் காங்கிரசை மிரட்டிய மேத்யூ , தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக குறித்த அவதூறு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், தேர்தல் வந்தாலே இவர் ஒரு கட்சி எதிராகவும், மற்றொரு கட்சிக்கு ஆதரவாகவும் அவதூறு வீடியோ வெளியிடுவார் என்பது அம்பலமாகியுள்ளது.
Discussion about this post