வளர்ந்து வரும் தொழிநுட்ப காலத்தில், பாரம்பரிய வரலாற்று சின்னத்தை மீட்டெடுக்கும் வகையில் சோழர் கால மரக்குதிரை தயாரித்து வரும் புஷ்ப லதா என்ற பெண்மணி குறித்து தற்போது பார்க்கலாம்…
2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லணை, ஆயிரம் ஆண்டு புகழ்பெற்ற பெரியகோவில் என பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சையில் தலையாட்டிபொம்மை, கலைதட்டு, வீணை என பல்வேறு கலை பொருட்களுக்கும் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் விளங்கி வருகிறது.
மேலும், சோழர் மன்னர் காலத்தில் இருந்து மரக்குதிரை தயாரிப்பு பணி தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. யானை, குதிரை படைகள் நிறைந்திருந்த சோழநாட்டில், வீரத்தை பயிற்றுவிக்கும் விதமாக குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வந்தது. வளர்ந்துவரும் நாகரீகங்கள், தொழில்நுட்ப காலத்தால், இந்த கலைகள் மறைந்தே போய்விட்டன.
மிகவும் நுணுக்கமான வேலை என்பதாலும், லாபம் குறைவு என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த தொழிலை யாரும் தற்போது செய்வதில்லை. அழிந்துவரும் இந்த கலையை மற்றவர்களுக்கு கற்றுதரும் வகையில் தஞ்சையை சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் மரக்குதிரை தயாரித்து வருகிறார். தேக்கு உள்ளிட்ட மரங்களில் தயாரிக்கப்பட்டு வந்த இந்த மரக்குதிரைகள், தற்போது, மாமரப் பலகையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இங்கு தயாரிக்கும் மரக்குதிரை உள்ளிட்ட பொருட்களை சேலம், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறார் புஷ்பலதா.
மரத்தை அறுத்து, ரசாயனம் கலக்காத மருத்துவ குணம் கொண்ட மூலிகைசாறு கலந்து பின்பு உருவம் பொறிக்கப்படுவதாகவும், ஒரு மரக்குதிரை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், மைசூர். சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த மரக்குதிரையை விரும்பி வாங்கி செல்வதாகவும் கூறுகிறார் புஷ்பலதா.
தமிழர்களின் வீர அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் மரக்குதிரை தயாரிப்பை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே மரக்குதிரை தயாரிப்பாளர் புஷ்பலதாவின் கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post