குற்றாலீஸ்வரனை தொடர்ந்து பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து தேனியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லி நகரை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஜஸ்வந்த். 10 வயதான இவர், கடந்த 2016ல் இருந்து பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி கடற்பகுதியை ஜெய் ஜஸ்வந்த் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கென ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகுமூலம் ஜெய் ஜஸ்வந்த், அவரது பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் மீனவர்கள் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து, அதிகாலை 4 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து நீந்தத் தொடங்கிய ஜஸ்வந்த், தனுஷ்கோடி வரையிலான 30 கிலோ மீட்டர் தூர பாக் ஜலசந்தியை கடந்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்த 10 மணி 30 நிமிடங்களை அவர் எடுத்துக் கொண்டார். இதையடுத்து ஜஸ்வந்தை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தனுஷ்கோடியின் அரிச்சல் முனையில் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
Discussion about this post