தான் மட்டும் கோடீஸ்வரராக இருந்தால் போதாது, தன்னைப் போல பிறரும் முன்னேற வேண்டும் என்பதற்காக, ஒருவர் வித்தியாசமானதொரு பணியை தினமும் செய்து வருகிறார்.. அப்படி என்ன செய்கிறார் பார்க்கலாம்..
தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி மணிரத்தினம் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து சாமி கும்பிட்டுவிட்டு , பீரோவில் உள்ள பொட்டலத்தை கையில் எடுப்பார். அந்த பை முழுவதும் 5000 ரூபாய்க்கு குறையாமல் 1 ருபாய் நாணயங்களாக இருக்கும். அதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து நாற்காலியில் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பார். அதற்கு முன்பாகவே வேலைக்கு செல்பவர்கள் சிலர் காத்திருப்பார்கள். அவர்கள் வரிசையாக வந்து அவரிடம் கை நீட்டும் போது, மணிரத்தினம் 1 ரூபாயை கொடுபார். அதன் பிறகு சைக்கிளில் செல்லும் அவர் சாலைகளில் வருபவர்கள் அனைவருக்கும் 1 ருபாய் கொடுப்பார். சிலர் இவர் வருவார் என காத்திருப்பார்கள். வாடிக்கையாக வாங்குபவர்கள் வரவில்லை என்றால் சைக்கிளில் உள்ள பெல்லை அடிப்பார். உடனே அவர்கள் ஓடி வந்து அந்த 1 ரூபாயை பெற்றுக் கொள்வார்கள்.
விவசாயி மணிரத்தினம் 1962 ல் விவசாய கூலி வேலைக்கு சேர்ந்த போது அவர் வாங்கிய சம்பளம் நாள் ஒன்றுக்கு 1 ரூபாய். தற்போது அவர் தனது 6 பெண் பிள்ளைகளையும்
கட்டிக் கொடுத்து, தனது ஒரு மகனுக்கு பல லட்சம் மதிப்பில் மண்டபம் ஒன்று கட்டிக் கொடுத்துள்ளார். இவர் தனது 6 பெண் பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்தின் மதிப்பு மட்டும் தற்போது தலா 1 கோடி. ஒரு ரூபாயில் ஆரம்பித்த தன் வாழ்க்கையில் உழைத்து தற்போது பல கோடிக்கு அதிபதியான காரணத்தால், தன்னை போலவே தன்னிடம் காலையில் ஒரு ருபாய் வாங்குபவர்கள் உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் கொடுத்து வருகிறார். தான் கொடுப்பது தானமோ தர்மமோ இல்லை, வாழ்க்கையில் அனைவரும் உழைத்து நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ராசிக்காக கொடுப்பது தான் இந்த 1 ருபாய் என்கிறார்..
மணிரத்தினத்திடம் ஒரு ரூபாய் வாங்கிச்சென்றால் அந்த நாள் இனிய நாளாக அமைவதாக அவ்வூர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்..
போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இவ்வுலகில், தன்னைப்போலவே பிறரும் முன்னேற வேண்டும் என விரும்பும் இந்த கோடீஸ்வரர் போற்றத்தக்கவரே…
Discussion about this post