நாளுக்கு நாள் உலக வெப்பமயமாதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதால் மக்கள் சந்திக்கும் இழப்புகள், வலிகள் வேதனைகள் ஏராளம். காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில் உலக நாடுகள் இணைந்து மாற்று ஏற்பாடுகளை குறித்த ஆலோசனைகளை விவாதித்து கொண்டு இருந்தாலும், தனி மனித பங்கு இங்கு அவசியமாகிறது.
இயற்கையை மீட்டெடுக்க மிகச்சிறந்த வழி மரம் நடுவது என்பதை பெரும்பாலோனர் அறிந்திருந்தாலும் அதை செய்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால் தன்னலம் பார்க்காமல் 18 வருடங்களாக பல இடங்களில் இலவச மரக்கன்றுகள் கொடுத்து அவற்றை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வனம் கலைமணி.
மனிதன் சுவாசிக்க வேண்டும் என்றால் இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வனம் என்ற அமைப்பை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய வனம் கலைமணியின், சமீபத்திய இலக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 1 லட்சம் மரங்களை நட வேண்டும் என்பது தான். அதற்கான பணிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், ஜப்பானில் பிரபலமாக இருக்கும் குறுங்காடுகளை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஜப்பானில் மியாவாகி முறையில் குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜப்பானை சேர்ந்த அகிரா மியாவாகி என்ற தாவரவியல் விஞ்ஞானி, 600 சதுர அடியில் நாட்டு மரங்கள் மற்றும் செடிகளை வளர்த்து வந்த முறை, தற்போது அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. மிகக் குறைந்த பரப்பளவில் செடி மற்றும் மரங்களை வளர்க்கும் போது இயற்கை மீதான நேசம் அதிகரிப்பதுடன் , சுற்றுசூழக்கு உகந்தது என்பதால் ஜப்பானில் இது பெரும் வரவேற்பை பெற்றது.
இதே மியாவாகி முறையில் , வனம் கலைமணி தமிழகத்தின் 3 இடங்களில் இந்த குறுங்காடுகள் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். கும்பகோணம், நாச்சியாங்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நன்னிலம் பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் குறுங்காடுகள் திட்டம் மாணவர்களின் துணையோடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு 92000 பனை விதைகள் நடும் திட்டத்தில் வேதாரண்யம் முதல் நாகப்பட்டினம் கடற்கரையோரம் மட்டும் 62000 பனை விதைகள் நட்டு சாதனை படைத்திருக்கிறார்.
இயற்கையை நேசிப்பவர்கள் என்றும் ஒரு செயலோடு நின்று விடுவதில்லை. அதே போல் தான் வனம் கலைமணியும். ஒரு புறம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்து நட்டு வைக்க சொல்லி பராமரிக்க கற்று கொடுப்பது மறுபுறம் பாரம்பரிய மரங்கள் மற்றும் விதைகள் குறித்த இலவச கண்காட்சியை பள்ளி கல்லூரி தோறும் நடத்தி கொண்டு வருகிறார். இதன் மூலம் பாரம்பரிய மரங்கள் மற்றும் விதைகள் , அதன் தாவரவியல் பெயர்கள் குறித்து அடுத்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து இதுவரை 7 லட்சம் விதைப்பந்துகள் தயார் செய்து வீசி இருப்பதோடு,கும்பகோணத்தில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மூன்று மணி நேரத்தில் 3500 மாணவர்களைக் கொண்டு 3 லட்சம் விதைப்பந்துகள் தயாரிப்பில் உலகசாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
பல வருடங்களாக வனம் கலைமணி மற்றும் அவருடைய மனைவி இருவர் மட்டுமே ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று இலவசமாக மரக்கன்றுகளை கொடுத்து வந்தனர். கடந்த வருடம் டெல்டா மாவட்டங்ளை கடும் சேதத்திற்கு உட்படுத்திய கஜா புயல் நிகழ்விற்கு பிறகு மரம் நடுவதற்காக பல்வேறு நபர்கள் இவரை அணுக, தற்போது 20 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வனம் கலைமணியோடு இணைந்து செயல்படுகின்றனர். இந்த குழு மூலம் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு உள்ளன.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவைகளால் வாழ்வில் மாற்றங்களை பல கண்டாலும், இயற்கையை பாதுகாப்பதில் மனிதன் மெல்ல மெல்ல மறப்பதால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். இதை தடுக்க நம்மால் முடிந்த வரை மரங்களை நடுவது நமக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும் நாம் சேர்க்கும் செல்வமும் அதுதான்.தமிழகத்தை பசுமையாக மாற்றுவதோடு இயற்கை மீதான நேசிப்பும், மரங்கள் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வும் என தொடர் பயணத்தில் உள்ள வனம் கலைமணி போன்ற மனிதர்கள் மூலம் தான் இயற்கை அன்னை காக்கப்படுகிறார் என்பது மறுக்க முடியாத நிஜம்.
Discussion about this post