விழுப்புரத்தில் திமுக கொடிக்கம்பம் நடும்போது, மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், சுபஸ்ரீக்கு ஆதரவாக வாய்பேசியவர்கள் தற்போது எங்கே என அஇஅதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
விழுப்புரம் – மாம்பழப்பட்டு சாலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்காக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் தினேஷ் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி கொடிக்கம்பம் நடும் பணியில் சிறாரை ஈடுபடுத்தியது ஏன் என கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு சுபஸ்ரீ மரணத்தின்போது, அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், சுபஸ்ரீ மரணத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும் குற்றம்சாட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இன்று திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக கொடிக் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 13 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுபஸ்ரீ மரணத்தின்போது அவருக்கு ஆதரவாக பேசிய திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் தற்போது, அப்பாவி சிறுவன் உயிரிழப்பு குறித்து, வாய்திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், சுபஸ்ரீக்கு ஒரு நியாயம் தினேஷுக்கு ஒரு நியாயமா என கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அஇஅதிமுக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், உயிரின் மதிப்பு ஆட்சிக்கு ஆட்சி மாறுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தபோது, அவருக்கு ஆதரவாக வாய் பேசியவர்கள் தற்போது எங்கே என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலவாரியம் தலையிட்டு சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post