உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோயில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.
தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு
மத்திய அரசின் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மாதம் 27 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. அன்றைய தினம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பூர்வாங்க பூஜையை தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி மாலை யாகசாலை பூஜை தொடங்கியது. குடமுழுக்கு நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு 8 ஆம் காலயாகசாலையை தொடர்ந்து ஹோமம் நடைபெற்றது..
இதனை தொடர்ந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் தலைமையில் ஓதுவார்களுடன் கடங்கள் புறப்பட்டு கோபுர விமானத்தை வந்தடைந்தன.
9.30 மணிக்கு 216 அடி உயரமுள்ள பெருவுடையார் விமானத்தில் உள்ள 12 அடி உயர தங்கமுலம் பூசப்பட்ட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அதிகாரிகள், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, சிவனை தரிசித்தனர். குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் வசதிக்காக தஞ்சை மாநகரில் 21 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Discussion about this post