எதார்த்தமாக நடக்கும் சம்பவம் சில நேரத்தில் மதிப்பு மிக்கதாக மாறி விடும். அதேபோல் ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு வாழைப்பழம் இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது.
இத்தாலிய கலைஞரான மௌரிஷியோ என்பவர் வித்தியாசமான கலை வேலைப்பாடுகள் செய்வதில் வல்லவர். இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காரணம். எது செய்தாலும் அது ட்ரெண்டாகும். “அமெரிக்க 18 காரட் தங்க டாய்லெட் ” என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது என்றே கூறலாம். இம்முறை ஒரு சாதாரண வாழைப்பழத்தைத் தன் படைப்புக்குப் பயன்படுத்திய மௌரிஷியோ அதைக் கண்காட்சி நடந்த ஹோட்டல் அறையில் டேப் கொண்டு சுவரில் ஒட்டி வைத்துள்ளார். ஆனால் அதுதான் கலைநயம் மிக்க பொருளாக 85 லட்சம் ரூபாய்க்கு விலைபோனது.
தான் உருவாக்கிய அந்தப் படைப்புக்கு “காமெடியன்” எனப் பெயர் சூட்டியிருந்தார் மௌரிஷியோ. இதனை 85 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியவர்தான் “காமெடியன் ” என்று ஒரு தரப்பினர் இணையத்தளங்களில் கூறிவருகின்றனர். சிலர் இந்தப் படைப்பை எதிர்த்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு “இது கலையின் உச்சம்” என்று கொண்டாடி வருகின்றது. பிசின், வெண்கலம் முதலியவற்றைப் பயன்படுத்தித் தனது படைப்புக்களை உருவாக்கிய மௌரிஷியோவிற்கு இந்த வாழைப்பழப் படைப்பு சம அளவில் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் பெற்றுத் தந்துள்ளது என்றே கூறலாம். எது எப்படியோ தமிழ் சினிமாவில் வரும் வாழைப் பழ காமெடி போல் மௌரிஷியோவின் இந்தப் படைப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது..